இந்தியா

உ.பி. தேர்தலை ஒத்திவையுங்கள்; அரசியல் பேரணிகளுக்கு தடைவிதியுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

74views

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகளுக்கு தடை விதியுங்கள் என்று பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு வழக்கில் பிணை வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சேகர் குமார் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி தெரிவித்த கருத்தில் கூறியதாவது

‘ ஒமைக்ரான் பரவலால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலையை எதிர்கொள்வோமா என்ற அச்சம் இருக்கிறது. சீனா, நெதர்லாந்து,ஜெர்மனி போன்ற நாடுகளில் முழுமையான லாக்டவுன் அல்லது பகுதி லாக்டவுனை பிறப்பித்து கரோனாவை கட்டுக்குள் வர முயல்கிறார்கள்.

2-வது அலையில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர், பல கரோனாவுக்கு உயிரிழந்தனர். உ.பி.யில் நடந்த கிராமபஞ்சாயத்து தேர்தல், மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் கரோனா தொற்று அதிகரித்தது. தொற்று அதிகரிக்க இந்த இரு தேர்தல்களும் காரணாக இருந்தன.

உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.அப்போது தேர்தல் பிரச்சாரங்கள், அரசியல்கட்சிக் கூட்டங்கள், பேரணிகள் நடக்கும். இதனால், மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நேரத்தலி யாரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றமாட்டார்கள், சமூக விலகலையும் பின்பற்றமாட்டார்கள்.

ஆதலால், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தலை ஒத்திவைக்கலாம், தேர்தல் காலங்களில் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கலாம். சரியான நேரத்தில் இவற்றைதடுத்து நிறுத்தாவிட்டால், 2-வது அலையைவிட மோசமான விளைவுகளைச் சந்திக்கலாம்.

ஆதலால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த தேர்தல்ஆணையம் தடைவிதித்து, வானொலி, தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட வேண்டும்.

தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துவதாக இருந்தால், அதை 2 மாதங்கள் ஒத்திவைக்கலாம். உயிர் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி செய்து பிரச்சாரங்கள், முயற்சிகளுக்கு பாராட்டுகள். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த பிரதமர் மோடியை நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!