விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

62views

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

2022-ன் தொடக்கம் வங்கதேச கிரிக்கெட்டுக்கு மகுடத்துடன் தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் எந்த வடிவத்திலும் பெற்ற முதல் வெற்றியாகும் இது.

இன்று காலை 147/5 என்று தொடங்கிய நியூசிலாந்து அணி மேலும் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களுக்குச் சுருண்டது. வெற்றி இலக்கு 40 ரன்களுடன் களமிறங்கிய வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42/2 என்று அபார வெற்றி பெற்று முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

17 போட்டிகள் தொடர்ச்சியாக உள்நாட்டில் வென்று வந்த நியூசிலாந்தின் வெற்றி படையணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது வங்கதேசம். வங்கதேசத்துக்கு இது 6வது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றியாகும்.

இந்த டெஸ்ட் தொடங்கும் போது எபாதத் ஹொசைன் என்ற அந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் மோசமான சராசரி வைத்திருந்தார், ஆனால் அவர்தான் இன்று ஹீரோ. 2வது இன்னிங்சில் 21 ஓவர் 6 மெய்டன் 46 ரன்கள் 6 விக்கெட் என்று அவர் ஆகச்சிறந்த பவுலிங்குடன் இந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹிதி ஹசன் மிராஸ் உழைப்பாளி பவுலர் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார்.

40 ரன்கள் இலக்கை 16.5 ஒவர்களில் வங்கதேசம் எட்டியது. ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசைன் ஷாண்ட்டோ ஆகியோர் ஆட்டமிழந்தனர். வங்கதேச சீனியர் வீரர் முஷ்பிகுர் ரஹீம் வின்னிங் ரன்களை எடுத்தார். ராஸ் டெய்லர் இன்று வந்தவுடன் எபாதத் ஹொசைன் பந்தில் பவுல்டு ஆனார். ஸ்லைட் இன்ஸ்விங்கர் மட்டையில் பட்டு ஸ்டம்பை தொந்தரவு செய்தது. எபாதத் சல்யூட் செய்தார்.

அடுத்த ஓவரில் கைல் ஜேமிசன் மிட் விக்கெட்டில் பந்தை காற்றில் ஆட அங்கு ஷோரிபுல் இஸ்லாம் வலது புறம் டைவ் அடித்து பிரில்லியண்ட் கேட்ச் எடுத்தார். ரச்சின் ரவீந்திராவை 16 ரன்களில் டஸ்கின் அகமட் வீழ்த்தினார். டிம் சவுதியை யார்க்கரில் காலி செய்தார் டஸ்கின். ட்ரெண்ட் போல்ட்டை மெஹிதி ஹசன் மிராஸ் வீழ்த்தினார் தைஜுல் இஸ்லாம் டீப் மிட்விக்கெட்டில் பிரில்லியண்ட் கேட்ச் எடுத்தார். ஆட்ட நாயகனாக எபாதத் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார்.

2021 இறுதியில் படுமோசமாக இருந்த வங்கதேசம் மொமினுல் ஹக் கேப்டன்சியில் புத்தெழுச்சி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தையே வீழ்த்தி காலி செய்து விட்டது. நியூசிலாந்து மண்ணில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கான பேட்டிங் பாடத்தை இந்திய அணி போன்ற அணிகளுக்கு வங்கதேசம் பாடம் எடுத்துள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: பங்களாதேஷ் 458 மற்றும் 42/2, நியூசிலாந்து 328 ஆல் அவுட் மற்றும் 169 ஆல் அவுட்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!