உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை நாளில் சிறுமியை பலி கொடுக்க முயன்ற இருவர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரி நடவடிக்கையால் உயிர் தப்பிய சிறுமி
வட மாநிலம் முழுவதி லும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் புனித நாளில் உயிர் பலி கொடுத்தால் நினைப்பது நிறைவேறும் என்ற மூடநம்பிக்கை ஒருவருக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் மனநலம் சரியில்லாத 7 வயது சிறுமி, ஹோலி பண்டிகை நேரத்தில் கடத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பிஹார் மாநில ஏழை தம்பதி யின் மூத்த பெண் குழந்தை நேற்றுமுன்தினம் காலை உ.பி. நொய்டாவின் செக்டர் 63 வீட்டு வாசலில் விளையாடி கொண் டிருந்தாள். நண்பகல் 12 மணி வரை சிறுமி வீட்டுக்கு வராததால் மாலை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அப்பகுதி காவல் துறை உதவி ஆணையரான தமிழர் ஜி.இளமாறன் ஐபிஎஸ், சந்தேகம் அடைந்து உடனடியாக தனி போலீஸ் படையை அமைத்தார்.
இப்படையினர் 200 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர், அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்தனர்.
அப்போது, அருகிலுள்ள தெருவில் வசிக்கும் சோனி வால்மீகி என்பவர் குழந்தையை அழைத்துச் செல்லும் காட்சிகள் ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. உடனடியாக சோனுவின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது கிடைத்த தகவலின்படி அவர்களது சொந்த ஊரான பாக்பத்தின் கான்பூர் கிராமத்துக்கு போலீஸ் படை விரைந்தது.
அங்கு சோனுவின் தங்கை வீட்டில் மறைத்து வைக்கப் பட்டிருந்த சிறுமியை போலீஸார் பத்திரமாக மீட்டனர். ஹோலி பண்டிகை அன்று பலி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் சிறுமி மீட்கப்பட்டாள். இதில் சோனு, அவருக்கு யோசனை அளித்த அவரது தங்கையின் கணவர் நீத்து வால்மீகி (31) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், ஒரு குடும்பத் தின் மூத்தப் பெண் குழந்தையை ஹோலி பண்டிகை அன்று நரபலி கொடுத்தால் உடனடியாக திருமணமாகும் என்று சோனுவுக்கு நீத்து யோசனை கூறியுள்ளார். அதற்காகவே சிறுமியை கடத்தி யுள்ளார் சோனு என்பது தெரிய வந்தது. புகார் கிடைத்த உடனே விரைந்து செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய ஐபிஎஸ் அதிகாரி இளமாறன், கும்பகோணத்தை சேர்ந்த தமிழர். கால்நடை மருத்துவம் பயின்ற இவர், 2019-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று உ.பி.யில் பணியாற்றி வருகிறார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உதவி ஆணையர் இளமாறன் கூறும்போது, ”வழக்க மாக 17 அல்லது 18 வயதுக்கு முன்பான திருமணம் முடியும் குடும்பத்தில், சோனுவுக்கு மட்டும் 26 வயதாகியும் மணமாகவில்லை. இதனால், அவர் தம் சகோதரியின் கணவரிடம் புலம்பியுள்ளார். கான்பூர் கிராமத்தின் செங்கல் சூளையில் வேலை செய்தபடி சில சித்து வேலைகளையும் செய்து பலரை ஏமாற்றியும் வந்துள்ளார். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீஸ் படைக்கு ரு.50,000 பரிசும் அறிவிக்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.