ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளதால் உத்தர பிரதேச மாநிலம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளை மூடி டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓமிக்ரான் வேகமாகப் பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஓமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு திருமண விழாக்களில் 200 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த அறிவிப்பு வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. மற்றொரு பக்கம் ஓமிக்ரான் வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 0.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. எனவே பதற்றம் அடையத்தேவையில்லை. சந்தைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் செல்வது துரதிர்ஷ்டவசமானது என்றார். மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல்திட்டத்தின் நிலை-1 மஞ்சள் எச்சரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கி காலை 5 மணி வரை நீடிக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் உடனடியாக மூடப்படுகின்றன. அத்தியாவசியமற்ற கடைகள், சேவைகள், வணிக வளாகங்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மெட்ரோ ரயில்களும், பஸ்களும் 50 சதவிகித பயணிகளுடன் இயங்கும். ஆட்டோ ரிக் ஷா, வாடகைக்கார்களில் 2 பேர் பயணிக்கலாம்.
திருமணம், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். சமூக, அரசியல், கலாசார, மத, திருவிழா நிகழ்வுகள் கூடாது. ஓட்டல்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். இதே போன்றுதான் மதுபார்களும் செயல்பட வேண்டும். ஆனால் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அவை இயங்க வேண்டும்.
தனியார் துறை அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். டெல்லி அரசுத்துறை அலுவலகங்களும் இப்படியே இயங்கும். மத வழிபாட்டிடங்கள் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள் திறந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.