உச்சத்தில் உட்கட்சி பூசல்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து?: முதல்வர் அம்ரீந்தர் சிங் சோனியா காந்திக்கு அதிருப்தி கடிதம்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜீத் சித்து நியமிக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.பாஜகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவஜீத் சித்து, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்-ஐ வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார்.இந்த நிலையில் அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.
இதனால் அதிருப்தி அடைந்த அம்ரீந்தர் சிங், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.அதில் சித்துவை காங்கிரஸ் மாநில தலைவராக நியமிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும் பழைய நிர்வாகிகளை காங்கிரஸ் தலைமை மதித்து நடத்துமாறும் கேட்டு கொண்டுள்ளார்.இதனிடையே பஞ்சாப் மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் இன்று அம்ரீந்தர் சிங்-ஐ சந்தித்து பேச உள்ளார்.பஞ்சாப் தேர்தலில் அம்ரீந்தர் சிங் தலைமையில் தான் காங்கிரஸ் சந்திக்க உள்ளதாகவும் பரிசோதனை முயற்சியை பஞ்சாப் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் ஹரிஷ் ராவத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.