இந்தியா

உக்ரைனிலிருந்து ஒரு வாரத்தில் 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை மீட்கத் திட்டம்

66views

ஒரு வாரத்தில் உக்ரைனில் இருந்து 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியிலும் அந்தந்த நாடுகள் களமிறங்கியுள்ளன.

அந்தவகையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்த ஒரு சில தினங்களில் 31 விமானங்களில் சுமார் 6,300 இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி வரை 21 விமானங்கள் இந்தியர்களை அழைத்து வந்துள்ளன. இந்திய விமானப்படை விமானங்கள் புச்சாரெஸ்ட் பகுதிக்கு செல்கின்றன.

மார்ச் 2 முதல் மார்ச் 8 ஆம் தேதிக்குள் 6,300 இந்தியர்களை மீட்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!