ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்கின்றன.
கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஈஷா அறக்கட்டளை சார்பில், இன்றும்(2-ம் தேதி), நாளையும் (3-ம் தேதி)தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடக்கின்றன. ஈஷா தன்னார்வலர்கள் மூலம் நடக்கும் இவ்வகுப்பில் ‘சூர்யசக்தி’ என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும்போது, ‘உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் தூண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க தொடங்கும்’ என்றார். காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை, நண்பகல் 11.30 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரை என 3 நேரங்களில் நடக்கும். ஏழு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், ”ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஆதியோகி முன்பு நடந்த சிறப்பு சத்சங்கத்தில் சத்குரு பேசும்போது,”மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, விழிப்புணர்வான உலகை உருவாக்க முடியும். உலகில் விழிப்புணர்வு அலையை உருவாக்கிவிட்டால், பூமியை பாதுகாப்பது என்பது இயற்கையான எதிர்வினையாக நிகழ்ந்துவிடும். உலகை தற்போது இருப்பதை விட சிறப்பானதாக ஆக்க நாம் உறுதி ஏற்போம். காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. காலத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் ஓடி கொண்டே இருக்கும். ஆகவே, அதன் மதிப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக மாற்ற முயற்சி எடுங்கள். ஒவ்வொரு தினத்தையும் புத்தாண்டின் முதல் தினமாக நீங்கள் பார்க்க வேண்டும். வெறும் தீர்மானங்களை எடுப்பதை விட தினமும் நீங்கள் ஒரு உயிராக என்ன செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். எல்லா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் வகையில் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்கிறீர்களா அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகளுக்குள் சிக்கப் போகிறீர்களா என்பதை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் செயலை விழிப்புணர்வாக செய்ய பழகுங்கள்,” என்றார். ‘கான்சியஸ் பிளானட்’ என்னும் உலகளவிலான இயக்கத்துக்காக சத்குரு 2022-ம் ஆண்டை அர்ப்பணித்துள்ளார்,” எனக் கூறப்பட்டுள்ளது.