இளையராஜா குறித்து இழிவாகபேசியதாக இயக்குனர் ரத்னகுமார், நடிகர் சித்ரா லட்சுமணன் மீது புகார்
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மீண்டும் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் “Chai with chithra” என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குனருமான ரத்னகுமாரை வைத்து பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் ரத்னகுமார் என்பவர் இசைஞானி இளையரஜாவை அவரது ஜாதியை மையமாக வைத்து இழிவாக பேசி உள்ளார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பாக மார்ச் மாதம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது மிக்க வருத்தமளிக்கிறது. அதனால் மீண்டும் இன்று புகார் அளித்துள்ளோம். புதிய டிஜிபி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் கொடுத்த பிறகு இளமுருகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இசைஞானி இளையராஜாவை அவரது சாதியை மையமாக வைத்து இழிவாக பேசி உள்ளனர். இது தொடர்பாக மார்ச் மாதம் ரத்னா குமார் மற்றும் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனால் மீண்டும் இன்று புகார் அளித்துள்ளோம். இழிவாக பேசிய வீடியோவை அவர்களே யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டனர். ஆதாரங்களை மறைத்தாலும் குற்றம் குற்றம் தான்” என்று அவர் கூறினார்.