தமிழகம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக: முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதில்

45views

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் செய்யவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

1980-களில் தனி ஈழத்துக்காக நடைபெற்ற போர் உச்சத்தில் இருந்தபோது, அதிமுகவும், எம்ஜிஆரும் இலங்கைத் தமிழர்களுக்கு பல வழிகளில் உறுதுணையாக இருந்தது உலகுக்குத் தெரியும்.

அந்த நேரத்தில், டெசோ, டெலோ போன்ற அமைப்புகளை நிறுவி, இலங்கைத் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதையும் மக்கள் நன்கறிவார்கள்.

இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தபோது, அவர்களைப் பாதுகாத்தது எம்ஜிஆர் அரசும், தொடர்ந்து ஜெயலலிதா அரசும்தான் என்பதை முதல்வர் மறைத்துவிட முடியாது.

திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 2009-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, 7 மணி நேர உண்ணாவிரதம் நடத்தினார். அவர் கூறியதை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து வெளியில் வந்த இலங்கைத் தமிழர்களை, சிங்களராணுவத்தினர் கொன்று குவித்ததை யாரும் மறக்க முடியாது.

இலங்கை தமிழ்ப் போராளியின் தாயாரை விமானத்தில் இருந்து இறங்க விடாமல் திருப்பியனுப்பிய திமுக அரசையும், அக்கட்சித் தலைவரையும் மக்கள் மறக்கவில்லை.

அதிமுக ஆட்சியில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசின் உதவிகளுடன், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. தமிழக மாணவர்கள் போன்றேஇலங்கைத் தமிழ் மாணவர்களுக்கும் பிளஸ்-2 வரை இலவசக் கல்வி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, பிரதமரிடம் அளித்த கோரிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி கடிதம் வழங்கினார்.

நான் முதல்வரான பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில அதிமுக அரசு ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது ஆளும் திமுகவைப்போல என்றுமே இரட்டை வேடம் போட்டதில்லை.

இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!