இந்தியா

இம்மாத இறுதியில் புதிய தேதி அறிவிக்கப்படலாம்: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தம்

60views

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

வரும் 28-ம் தேதி இத்தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள சூழலில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனால், இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உருவாக்கப்பட்டது முதல், இதுவரையில் இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2011ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் 11 ஆண்டுகளாகியும் இதுவரை நடக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையராக ராய் பி தாமஸ் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகளும் நடந்தன.

இருமுறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி இத்தேர்தலை நடத்தக்கோரி அரசியல் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

புதுவை அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சியினர் வழக்கை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் தேர்தல் நடத்துவதற்கான இடைக்கால தடை நீங்கியது. இதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியது. நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியும் நடந்து முடிந்தது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன் றத்தில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா, தாக்கல் செய்த மனு, சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. காலதாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தேர்தலுக்கான முதல் கட்ட மற்றும் ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “அதிகாரிகள் அளவில் கூட்டம் நடந்தது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதி வருகிறது. அப்போது நீதிமன்றம் உத்தரவுப்படி செயல்படுவோம்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில்தான் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள்தான் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த தயாராக இருப்போம். இம்மாத இறுதியில் தேர்தல் தேதி தெரிய வாய்ப்புள்ளது. தேர்தல் ஏப்பரல் மாதம் நடைபெறுமா? அல்லது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த பின் நடைபெறுமா? என்பது அப்போது தெரிய வரும்” என்று தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!