இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊடங்ககும், மற்ற நாட்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியில் பயணம் செய்வோர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ-பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இ-பதிவு முறை இன்று (17.05.2021) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பணிகளான மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு , முதியோர்களுக்கான தேவை, நேர்காணல் போன்றவற்றுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கும், ‘இ-பதிவு’ அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்காக, ‘இ-பாஸ்’ முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதில் விண்ணப்பித்தவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி மற்றும் அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னரே இ-பாஸ் வழங்கப்பட்டது. இந்த நடைமுறையில் சில சிரமங்கள் இருந்ததால், தற்போது இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இணையத்தில் இ-பதிவு விண்ணபிக்க, முதலில் செல்போன் எண்ணை கொடுத்து, பாஸ்வேர்டை பதிவு செய்து உள் நுழைய வேண்டும். பின்னர் வெளிமாநிலங்களில் இருந்து பயணமா அல்லது தமிழகத்துக்குள் பயணமா என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பை சார்ந்த காரியங்கள், திருமணம் என கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவண ஆதரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இ-பாஸ் போன்று பதிவு செய்து அனுமதிக்காக காத்திருக்காமல், இ-பதிவு மூலம் பதிவு செய்து மக்கள் அத்தியாவசிய பணியை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் ஒருவரும், காரில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.