தொழில்நுட்பம்

இன்றுடன் முடியும் காலக்கெடு: புதிய விதிகளை ஏற்க ஃபேஸ்புக் முடிவு

86views

மிகப் பெரிய சமூக ஊடகங்களுக்காக வகுக்கப்பட்ட புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விதிகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தங்களுக்கான சில கட்டுப்பாடுகள் குறித்து அரசுடன் பேசி தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் விதிகளை பின்பற்றாத நிறுவனங்களின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு முன்பாக, அதாவது கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் விதிகளை வகுத்து, அரசிதழில் வெளியிட்டது. இந்த விதிகளை சமூக ஊடகங்கள் அனைத்தும் பின்பற்றுவதற்கான ஒப்புதலை வழங்கக்கோரி இன்று வரை காலக்கெடு விதித்திருந்தது. இந்த விதிகளை பின்பற்ற தவறினால் சமூக வலைதள ஊடகங்கள் என்ற அந்தஸ்தையும், பாதுகாப்பையும் இழந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய சட்டத்தின்படி சமூக வலைதளங்கள் குறைதீர்ப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரி, புகார்களை கவனித்து தீர்வு காணும் அதிகாரி, ஆட்சேபனை கருத்துகளை கண்காணித்து அதை நீக்குவதற்கான அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய நெறிமுறைகளை அமல்படுத்தவும், மேற்கூறிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவும் சில சமூக ஊடகங்கள் ஆறு மாதம் வரை காலக்கெடு கேட்டிருந்தன. ஆனால், மத்திய அரசு அந்த கோரிக்கையை நிராகரித்து நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டது. காலக்கெடு கேட்ட சமூக ஊடகங்களில் சில, வெளிநாடுகளில் இருப்பதால், தலைமையகத்தின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றன.

கடந்த வாரம் சம்பித் பத்ரா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் வெளியிட்ட குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டும் இட்டுக்கட்டிய பதிவு என்ற முத்திரையுடன் வகைப்படுத்தியது. ட்விட்டரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அந்த முத்திரையை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள ட்விட்டர் நிறுவனங்களில் டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவு அதிரடியாக சோதனை நடத்தியது. இதன் காரணமாக மத்திய அரசுக்கும், ட்விட்டருக்கும் மோதல் போக்கு நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், புதிய விதிகளை பின்பற்றுவதற்காக கேட்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.

காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்காவிட்டால் இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் அந்நிறுவனம் சார்ந்த இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் செயல்படாமல் முடங்கி விடக்கூடும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!