விளையாட்டு

இந்திய பெண்கள் வெற்றி நட்பு கால்பந்தில் அபாரம்

60views

சர்வதேச நட்பு கால்பந்தில் இந்திய பெண்கள் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வலிமையான சீன தைபேவை வென்றது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு (ஜன. 20 – பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 20வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி அன்னிய மண்ணில் நான்கு நட்பு போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் எமிரேட்சை வென்ற இந்தியா (4-1), அடுத்து டுனிசியாவிடம் (0-1) தோல்வியடைந்தது. பின் பஹ்ரைன் சென்ற இந்தியா, அந்த அணியை 5-0 என சாய்த்தது.

நான்காவது, கடைசி போட்டியில் உலகத் தரவரிசையில் 57 வது இடத்திலுள்ள இந்திய அணி, 40வது இடத்திலுள்ள வலிமையான சீன தைபே அணியை சந்தித்தது. போட்டியின் 3 வது நிமிடத்தில் சீன தைபே வீராங்கனைக்கு ‘பாஸ்’ செய்யப்பட்ட பந்தை இடையில் புகுந்து தட்டிப்பறித்தார் ரேணு. தொடர்ந்து அதே வேகத்தில் சென்ற இவர், நீண்ட துாரத்தில் இருந்து கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து வலைக்குள் புகுந்தது. முதல் பாதியில் இந்தியா (1-0) முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கடைசி வரை கோல் அடிக்கவில்லை. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து சுவீடன் செல்லும் இந்திய அணி, அங்குள்ள கிளப் அணிகளுக்கு எதிராக இரு போட்டிகளில் (அக். 20, 23) பங்கேற்க உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!