இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோன தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் இதனை தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஒமைக்ரான் வைரசால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்றும், ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
பிப்ரவரி மாதம் ஒமைக்கரான் வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனிந்தர அகர்வால் கணித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொண்டு இந்த புள்ளி விபரத்தை தெரிவிப்பதாக கூறி இருக்கும் அவர், டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைபிடித்தால் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்க முடியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் சிறுவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
டெல்டாவை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இரண்டு அல்லது 3 வாரங்கள் கழித்துதான் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். சிறுவர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தினால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.