‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-12’ போட்டியில் இன்று இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் இந்திய அணி மீண்டும் இமாலய வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி-20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இன்று, துபாயில் நடக்கவுள்ள ‘சூப்பர்-12’ சுற்றுக்கான ‘குரூப்-2’ போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.ரோகித் நம்பிக்கைபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 66 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து நல்ல துவக்கம் தந்த லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி மீண்டும் சாதிக்கலாம். ‘மிடில்-ஆர்டரில்’ அசத்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் மீண்டும் நல்ல ஸ்கோரை பெறலாம்.
‘டாப்-ஆர்டரில்’ கேப்டன் விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் எழுச்சி காண வேண்டும். பின்வரிசையில் களமிறங்கும் ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ஷர்துல் தாகூர், பேட்டிங்கிலும் கைகொடுத்தால் நல்லது. வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, பும்ரா நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்ட்யா ஒத்துழைப்பு தர வேண்டும்.
‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் கூட்டணி மீண்டும் மிரட்டலாம்.கிராஸ் ஆறுதல்ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து அணிகளிடம் வீழ்ந்த ஸ்காட்லாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் வெற்றியுடன் விடை பெற முயற்சிக்கலாம். பேட்டிங்கில் மாத்யூ கிராஸ் (128 ரன்), பெர்ரிங்டன் (123), ஜார்ஜ் முன்சே (111) ஆறுதல் தருகின்றனர். கேப்டன் கோட்சர், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ் கைகொடுத்தால் நல்லது.
‘வேகத்தில்’ ஜோஷ் டேவி (9 விக்கெட்), சப்யான் ஷரிப் (7), பிராட் வீல் (7), ‘சுழலில்’ மார்க் வாட் (6), இந்திய ‘பேட்டர்களுக்கு’ தொல்லை தர முயற்சிக்கலாம். இன்று சார்ஜாவில் நடக்கவுள்ள மற்றொரு ‘குரூப்-2’ போட்டியில் நியூசிலாந்து, நமீபியா அணிகள் மோத உள்ளன.வாய்ப்பு எப்படிஇந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள இரு போட்டிகளிலும் (எதிர்: ஸ்காட்லாந்து, நமீபியா) இமாலய வெற்றி பெற வேண்டும். மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 6 புள்ளிகள் பெறும். ‘ரன் ரேட்’ அடிப்படையில் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.