இந்தியாவில் ஆண்டுதோறும் தூய்மையான மாநிலங்கள் மற்றும் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் 2021-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த தூய்மையான மாநிலம், நகரத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகரான இந்தூர் நகரம் ‘இந்தியாவின் சிறந்த நகரம்’ என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தூர் தொடர்ந்து 5-வது முறையாக சிறந்த தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘தூய்மையான நகரம்’ பிரிவில் இரண்டாவது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரும், ஆந்திர மாநிலம் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு மூன்றாவது இடம் பெற்ற நவி மும்பை தற்போது ஒரு இடம் சறுக்கி 4-வது இடம் பெற்றுள்ளது. மாநிலங்கள் வரிசையில் ‘இந்தியாவின் சிறந்த மாநிலம்’ என்ற பட்டத்தை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றுள்ளது.
இந்த பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் 2-வது இடத்தையும், மத்தியப் பிரதேச மாநிலம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 100-க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், ஜார்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியானா மற்றும் கோவா இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தூர், சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது தில்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன. இதே பிரிவில் உள்ள 25 நகரங்களில் லக்னோ மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளது. மகாராஷ்டிராவின் விட்டா நகரம் 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து லோனாவாலா மற்றும் சாஸ்வாட் உள்ளன.
1-3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாட்டின் தூய்மையான சிறிய நகரப் பிரிவில் புது டெல்லி மாநகராட்சி முதல் இடத்தைப் பிடித்தது. கன்டோன்மென்ட் போர்டுகளின் பிரிவில், அகமதாபாத் தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து மீரட் மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. மாவட்ட தரவரிசைப்பிரிவில் சூரத் முதல் விருதைப் பெற்றுள்ளது, இந்தூர் மற்றும் புது தில்லி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி, “தூய்மையான கங்கை நகரம்” என தேர்ந்தெடுக்கப்பட்டது, பீகாரின் முங்கர் மற்றும் பாட்னா ஆகியவை இந்த பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 28 நாட்களில் 4,320 நகரங்களில் இந்த தூய்மைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 4.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பட்டியல் எதிலும் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்து.