இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் 4-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வென்றது.
இந்த சீசனில் வெஸ்ட் ஹாமுக்கு இது 2-ஆவது வெற்றி; லெய்செஸ்டா் சிட்டிக்கு இது முதல் தோல்வி. கடந்த 1997-க்குப் பிறகு வெஸ்ட் ஹாம் ஒரு சீசனின் முதல் இரு ஆட்டங்களில் வென்றது இது முதல் முறையாகும்.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் தரப்பில் பாப்லோ ஃபாா்னால்ஸ் (26-ஆவது நிமிஷம்), சயீது பென்ராமா (56-ஆவது நிமிஷம்), மிகைல் அன்டோனியோ (80, 84-ஆவது நிமிஷங்கள்) ஆகியோரும், லெய்செஸ்ா் அணி தரப்பில் யூரி டிலேமான்ஸும் (69-ஆவது நிமிஷம்) கோலடித்தனா்.
ஆன்டோனியோ சாதனை: இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த வெஸ்ட் ஹாம் வீரா் மிகைல் அன்டோனியோ, அந்த அணிக்காக இந்த லீக் ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். முன்னதாக, பாவ்லோ டி கேனியோ 47 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் செவில்லா 1-0 என்ற கோல் கணக்கில் கடாஃபியை வென்றது.
செவில்லாவுக்கு இது 2-ஆவது வெற்றி; கடாஃபிக்கு இது 2-ஆவது தோல்வி. இந்த ஆட்டத்தில் செவில்லா தரப்பில் எரிக் லமேலா கடைசி நிமிஷத்தில் (90+3) கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா். ஒசாசுனா – செல்டா விகோ அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.
இத்தாலிய கால்பந்து லீக் போட்டியான சீரி ஏ-வில் மிலன் 1-0 என்ற கோல் கணக்கில் சம்ப்தோரியாவை வீழ்த்தியது. மிலன் அணிக்காக ப்ராஹிம் டியாஸ் 9-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். காக்லியாரி – ஸ்பெஸியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
காக்லியாரி தரப்பில் ஜாவ் பெட்ரோ 62 மற்றும் 66-ஆவது நிமிஷங்களிலும், ஸ்பெஸியா தரப்பில் இம்மானுவல் கியாசி 7-ஆவது நிமிஷத்திலும், சைமன் பஸ்தோனி 58-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.