இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் குவித்தது. அதேவேளையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. இங்கிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 237 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 468 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது.
நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 113.1 ஓவரில் 192ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆலி போப்4, பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் 207 பந்துகளில், 26 ரன்கள்சேர்த்து ரிச்சர்ட்சன் பந்தில் ஹிட்விக்கெட் முறையில் வெளியேறினார். கிறிஸ்வோக்ஸ் 97 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து போல்டானார். ஆலி ராபின்சன் 8, ஜேம்ஸ்ஆண்டர்சன் 2 ரன்களில் நடையைகட்டினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ரிச்சர்ட்சன் 5 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. மானர்ஷ் லபுஷான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.