ஆரம்பமே அதிரடி: சீனியர்களுக்கு ராகுல் டிராவிட் ஸ்கெட்ச்! மொத்தமாக மாறும் இந்திய அணி! உருவான இளம் படை
இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் போட்டித்தொடரிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார் ராகுல் டிராவிட்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது பிசிசிஐ.
வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 21ம் தேதி கொல்கத்தா போட்டியோடு நிறைவடைகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா , வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு முன்பாக இளம் இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. உலக கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி ஓய்வு பெற்றுவிட்டார். புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வருகை தந்துள்ளார். இதற்கு முன்பாக 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் ஆட்டத்தை போலவே பயிற்சிகளிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பவர். ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிப்பவர். எனவேதான் அவரது பயிற்சியின் கீழ் இருந்துவந்த இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு அங்கே அதிகமான இளம் வீரர்கள் இருப்பது ஒரு காரணம். 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடர் போன்றவற்றில் சீனியர்கள் அவசியம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகமும், துடிப்பும், உடலில் வளைவு தன்மையும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சம்பவம் சுட்டிக்காட்டி விட்டது.
2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி, மகேந்திரசிங் தோனி தலைமையில் வென்றது. அதில் இருந்த வீரர்கள் அனைவரின் வயதும் 30 வயதுக்கு கீழ் தான். ஆனால் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியை சேர்ந்த 9 வீரர்கள் 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக கவனிக்கப்படுகிறது.
1999ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு கூட, முன்னேறவில்லை. எனவே கடுமையான விமர்சனங்கள் எழுந்த காலகட்டத்தில் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. யுவராஜ்சிங், முகமது கைஃப், ஹர்பஜன்சிங், இர்பான் பதான், ஜாகீர்கான், சேவாக் போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இந்திய அணியில் அறிமுகமாகியிருந்தனர். 2003ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை அந்த அணி முன்னேறி அசத்தியது.
தோனியும் கேப்டனான பிறகு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே சீனியர்களுக்கு கல்தா கொடுக்க வேண்டியதாயிற்று. வளர்த்து விட்டவர்களை தோனி மதிக்கவில்லை என்று சில தரப்பு அவர் மீது கோபம் கொண்டது. ஆனால், அவர் செய்தது அணி நன்மைக்காக என்பதை இப்போது ரசிகர்கள் பலரும் புரிந்து கொண்டனர். இந்த உலக கோப்பை தொடரின் தோல்வி அதை புடம் போட்டு காட்டி விட்டது.
எனவே இந்தியாவின் இந்த வெற்றி பார்முலா இப்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்த முதல் போட்டித் தொடரிலேயே, இளம் படைகள் உள்ளே கொண்டு வரப்ப்டடுள்ளன. இவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் கண்டிப்பாக இந்த போட்டி தொடரில் அசத்துவார்கள் என்று நம்பலாம்.
கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சஹல், ஆர்.அஸ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.