இந்தியா

ஆப்கானிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

47views

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், தலிபான்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் வலுவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘அப்சர்வர் ரிசர்ச்பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை சார்பில் ‘இந்திய – அமெரிக்கஉறவும் – 21-ம் நூற்றாண்டின் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிபின் ராவத் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமையவுள்ளதையும், அண்டை நாடுகளில் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அதனை வேரறுப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

எனவே, ஆப்கனில் இருந்து தீவிரவாதம் இந்தியாவுக்குள் நுழைந்தால் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும். இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதேபோன்ற நடவடிக்கையை இந்த விவகாரத்திலும் இந்தியா எடுக்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய தீவிர வாத அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!