விளையாட்டு

ஆபாச தகவல் அனுப்பியது அம்பலம் பதவி விலகினார் ஆஸி. கேப்டன் பெய்ன்

90views

பெண் ஊழியருக்கு ஆபாச தகவல்களை அனுப்பியது அம்பலமானதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார்.

2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பு ஏற்றார். முதல் தொடரிலேயே இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணிலேயே இழந்தது சற்று பின்னடைவை கொடுத்தது.

ஆனாலும், இம்மாதம் ஆஸி.யில் தொடங்க உள்ள ஆஷஸ் தொடருக்கான கேப்டனாக டிம் பெய்ன் மீண்டும் அறிவிக்கப்பட்டார். இவர் எதிரணி வீரர்களை கிண்டல் செய்து வார்த்தை சீண்டலில் ஈடுபடுவதில் பிரபலமானவர். இந்நிலையில், பெய்ன் மீதான பழைய பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு உண்மைதான் என்ற தகவல் வெளியானது. 2017ல் டாஸ்மேனியா கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு பெய்ன் ஆபாச குறுஞ்செய்தி மற்றும் படங்களை அனுப்பியுள்ளார். அதில் தன்னை உறவு கொள்ள அழைத்ததாகவும் அப்போதே அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.

அதை விசாரித்த டாஸ்மேனியா கிரிக்கெட் வாரியம், ‘பெயின் மீது குற்றம் இல்லை’ என அறிக்கை அளித்து உண்மை வெளி வராமல் பூசி மெழுகியது.

இந்த சர்ச்சை பற்றிய உண்மைத் தகவல்களை ஆஸ்திரேலியாவின் ‘நியூஸ் கார்ப்’ மீடியா தற்போது அம்பலப்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெய்ன், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தவறை செய்தேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நான் இந்த தவறை செய்திருக்க கூடாது. இது குறித்து மனைவியிடம் பேசினேன். அவர் என்னை மன்னித்து விட்டார். ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறேன்’ என்றார். அணியில் ஒரு வீரராக பெய்ன் தொடர்வார் என்று ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டிம் பெய்ன் விலகலை தொடர்ந்து துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த பேட் கம்மின்ஸ் (28) புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸி. கிரிக்கெட் வரலாற்றில் 65 ஆண்டுகளுக்கு பிறகு வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் 34 டெஸ்ட்களில் விளையாடி 164 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!