ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாயின. இதையடுத்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.
சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியுள்ளது.
ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாவட்டங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. அமராவதியில் இருந்து புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிர்வாகத்தை எளிமையாக்கவும், அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களை போய்ச் சேரவும் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்தன. இவற்றை பிரித்து மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாகி உள்ளன. புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், கோட்டாட்சியர்கள் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களது அலுவலகங்களில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஆட்சியர், எஸ்.பி.க்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கடந்த 1956-ம் ஆண்டு தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களில் இருந்து பிரிந்து ஆந்திர மாநிலம் உதயமானது. கடந்த 2014-ல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, தனி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனால், ஆந்திரா மீண்டும் பூகோள ரீதியாக தனது வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டியாகி விட்டது.
மக்களவை தொகுதிகளின் அடிப்படை யில் 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிப்பது என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார். இதில் சில மாற்றங்கள், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, 26 மாவட்டங்கள் கொண்ட ஆந்திரா நேற்றுமுதல் செயல்பட தொடங்கியது.
பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ள திருப்பதி நகரம், சித்தூர் மாவட்டத்தில் இருந்தது. தற்போது சித்தூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. மதனபள்ளி ராய சோட்டி மாவட்டத்துடன் இணைந்தது. சித்தூர் தனி மாவட்டமானது.
திருப்பதி, காளஹஸ்தி, தடா, ஹரி கோட்டா, வெங்கடகிரி, கோடூர், சூலூர்பேட்டை ஆகிய தொகுதிகள் இணைந்து தனி திருப்பதி மாவட்டமாக உருவாகியுள்ளது. 1911-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி சித்தூர் மாவட்டம் உதயமானது. 111 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடரமணா, திருச் சானூர் அருகே கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய எஸ்.பி.யாக பரமேஸ்வர் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.