உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கை மிகவும் ஆழமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் என்றைக்கும் வன்முறைக்கு இடம் கிடையாது. அனைவரையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இருக்கும்போது, அதை யாரும் கையில் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை. ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. ஆதாரம் இருந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.