அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவையும் பொருட்படுத் தாமல் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிக உயர்ந்த மலைப்பகுதி யான காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கின.
வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள உயர்ந்த மலைப் பகுதிகளில் குளிர் காலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது சவாலாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 2 ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபரில் உத்தராகண்ட் மாநிலம் திரிசூல் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், அங்கு மலையேற்றம் சென்றிருந்த 5 கடற்படை வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 2019-ல் சியாச்சின் பனியாறு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 6 ராணுவ வீரர்களும் மற்ற இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் 11 வீரர்களும் இறந்ததாக கடந்த 2020 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.