கொரோனா ஒருபக்கம் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் மறுபக்கம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கோடை வெயிலும் கொளுத்துவதால் மக்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் அறிவிப்பில் , தென்கிழக்கு அரபிக் கடலில் 14 ஆம் தேதி , காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது . புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து , கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக , தென் தமிழகம் , கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரபிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பொழியும் எனவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.