இந்தியா

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக நிர்ணயம்: ஆந்திர அமைச்சரவை முடிவு

112views

ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமராவதியில் நேற்று நடந்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.வெங்கட் ராமய்யா கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று மேலும்பரவாமல் இருக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பூஸ்டர் டோஸான 3-வது தவணை தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது, இரவு நேர ஊரடங்கைநீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உச்சவரம்பை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய பிஆர்சி-யின் படியே ஊதியம் வழங்கப்படும்.

மாநிலத்தில் மேலும் 16 மருத்துவக் கல்லூரிகள் கட்ட ரூ.7,880 கோடி நிதி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக ரூ.3,820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த, 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் உயிரிழக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும். இறகு பந்து விளையாட்டு வீரர் கடாம்பி காந்த் தனது அகாடமியை தொடங்க திருப்பதியில் 5 ஏக்கர் நிலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அழைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான சட்டத் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.வெங்கட் ராமய்யா தெரிவித்தார்

சம்பள உயர்வை வழங்காமல் புதிய பிஆர்சி-யை அறிவித்த ஆந்திர அரசுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து துறை ஊழியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசை கண்டித்து அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து வரும்திங்கள்கிழமை தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. இதனால், அரசுப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!