நிகழ்வு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தக வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வந்தவாசியில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

250views
வந்தவாசி.
அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி நூலக அரங்கில் (பிப்ரவர்—07, திங்கள்) தொடங்கப்பட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
இடையிடையே பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் குழந்தைகளுக்கான கல்வி முழுமையாக கிடைத்திடவில்லை. வீடுகளிலேயே
இருந்த குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஈடுபாடு சற்றே குறைந்தது. தற்போது, பிப்ரவரி-1 முதல் அனைத்துப் பள்ளிகளும்
திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலை மத்திய அரசு ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வு செய்துள்ளது.
அரசுப் பள்ளி குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும், ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’
பெற்ற நூலை அனைத்துப் பள்ளி குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையிலும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம்
தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வான கவிஞர் மு.முருகேஷூக்கும் பாராட்டு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழாவிற்கு வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொ.பத்மாவதி தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா அனைவரையும் வரவேற்றார்.
குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த வந்தவாசி இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் ‘அம்மாவுக்கு மகள்
சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 100 பிரதிகளை இலவசமாக வழங்கினார்.  இவ்விழாவில், பள்ளியின் உதவித் தலைமையாசிரியர்கள் சி.விஜயலட்சுமி, பிரியஜெயந்தி, முதுகலை ஆசிரியை சே.வனிதா, உடற்கல்வி ஆசிரியர் சி.மின்னிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை இலவசமாக பெற விரும்பும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ள அரசுப்
பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 9444360421 எனும் செல்பேசி எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்தால், குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்படும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!