இந்தியாசெய்திகள்

அமைச்சரவை அமைவதில் தொடரும் இழுபறி: புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜக இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி

62views

புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை உருவாவதில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ‘அமைச்சரவைப் பற்றி அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை’ என பாஜக முடிவு எடுத்துள்ளது. ‘பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று என்.ஆர்.காங்கிரஸ் அறிவித் துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஒரு மாதம் ஆன நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவிகளை கேட்டு வருகிறது. என்.ஆர்.காங். தரப்பில் இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி தருவதாக கூறப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இப்பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி பாஜகவினர், தங்கள் கட்சியின் தேசியத்தலைவர் நட்டா வரை சென்று புகார் தெரிவித்து விட்டனர். பலமுறை முயன்றும், பாஜகவினரை ரங்கசாமி சந்திக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை மட்டுமே தருவதில் ரங்கசாமி உறுதியாக உள்ளார் என்பதையும் தெரிவித்து விட்டனர்.

புதிய அரசில், பாஜக எம்எல்ஏக்கள் தரப்பில் பலரும் அமைச்சர் ஆகும் எண்ணத்தில் உள்ள சூழலில் அவர்கள் பலரும் பொதுவெளியில் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ‘இனி யாரும் இதுபற்றி கருத்துகளை தெரிவிக்கக்கூடாது’ என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு செல்ல பாஜக முடிவு எடுத்துள்ளது.

இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் மாநில செயலர் ஜெயபால் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், ” புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு இதுவரை பாஜகவில் இருந்து யாரும் முதல்வர் ரங்கசாமியை சந்திக்கவில்லை.எப்போது வந்தாலும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் தொடரும் அரசியல் சிக்கல்களுக்கு நடுவில், ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி, நேற்று மதியம் சந்தித்தார். முதல்வருடன் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனும் உடன் சென்றிருந் தார். அமைச்சரவை அமைப்பது தொடர்பாகவே இந்த சந்திப்பு என்று தகவல் பரவியது.

“ஆளுநர் தமிழிசைக்கு இன்று பிறந்தநாள். அவர் தெலங்கானா செல்வதால் மரியாதை நிமித்தமாக முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். வேறு விஷயங்கள் ஏதும் அப்போது விவாதிக்கப்படவில்லை” என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவிகளை பாஜக கேட்டு வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி பாஜகவினர், தங்கள் கட்சியின் தேசியத்தலைவர் நட்டா வரை சென்று புகார் தெரிவித்து விட்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!