அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தலீபான்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.
இதில் அமெரிக்க படை வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை மையமாக வைத்து அமெரிக்கா ‘டிரோன்’ கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த சம்பவத்திற்கு அமெரிக்க ராணுவம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ”ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வெளி அமெரிக்க டிரோன்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது. இதனால் சர்வதேச உரிமைகள் சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளது. இந்த மீறல்கள் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.