உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பாம்போஜெனிசிஸ் வகை’வெடிகுண்டு பனிப்புயல்’ எச்சரிக்கை

54views

கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது.

கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 அமெரிக்க விமானங்கள் இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கின் பெரும்பகுதி முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை குளிர்ந்த வெப்பநிலை ஒரு பிரச்சினையாக நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

நார் ஈஸ்டர் என அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பாஸ்டன் பகுதியில் 2 அடி உயரம் வரை பனி படர்ந்து மூடக்கூடும். மேலும், நியூயார்க்கின் சில பகுதிகளில் ஏற்கெனவே சுமார் 2 அடி வரை பனி மூடியுள்ளது.

மைனேவின் சில பகுதிகளில் சனிக்கிழமை இரவு வரை 12 அங்குலம் வரை (30 செ.மீ.) பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கக்கூடும்.

இப்புயல் ‘பாம்போஜெனிசிஸ்’ நிலையை அடைந்துள்ளதாக தேசிய வானிலை சேவை சனிக்கிழமை அன்று உறுதிப்படுத்தியுள்ளது. ‘பாம்போஜெனிசிஸ்’ என்பது, குளிர்ந்த பனிக் காற்று வெப்பமான கடல் காற்றுடன் கலந்து வளிமண்டல அழுத்தத்தில் திடீரென வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். இதனால், பாம்ப் சைக்ளோன் (Bomb Cyclone) என அழைக்கப்படும் வெடிகுண்டு சூறாவளி ஏற்படுகிறது.

“பாம்போஜெனிசிஸ் என்பது புயல் மிக விரைவாக தீவிரமடைதல்,” என கனெக்டிகட் வானிலை ஆய்வாளர் ஆஷ்லே பெய்லர் தெரிவித்தார்.

“24 மணிநேரத்திற்கு முன்னதாக, இது கரோலினா கடற்கரைக்கு அப்பால், காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வளர்ந்து வந்தது. இப்போது, அது மிகப்பெரிய புயலாக உருவெடுத்துள்ளது” என்றார்.

பாஸ்டனில் உள்ள தேசிய வானில சேவை அமைப்பு, அவசர காரணங்களுக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.

“நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால், உங்களுடன் குளிர்காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய ‘கிட்’டை வைத்திருக்க வேண்டும். பனிப்புயலில் சிக்கிக்கொண்டால், உங்கள் வாகனத்திலேயே இருங்கள்” என தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த புயல், சனிக்கிழமை அதிகாலையில் கடற்கரையைத் தாக்கத் தொடங்கியது, இதனால், ஏற்கெனவே பல மாகாணங்கள் சில அங்குல அளவுக்கு பனியால் மூடப்பட்டுள்ளன.

வடகிழக்கு முழுவதும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதன்முறை.

சுமார் 7.5 கோடி மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த புயல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாண்ட், ரோட் ஐலாண்ட், விர்ஜினியா ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் அப்பகுதிகளில் அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதன்மூலம், மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில் நடமாட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

“கடும் காற்று, கடும் பனி, பனிப்புயல் காரணமாக, தீவிரமான நார் ஈஸ்டருக்கான கூறுகளும் உருவாகியுள்ளன,” என, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு நின்றுவிட்டாலும், உறைபனி வெப்பநிலையால் பாதிப்புகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

நியூஜெர்சியின் அட்லாண்டிக் நகர காவல்துறையினர், “வெளியே செல்வதன் மூலம், தங்கள் பணியை கடுமையாக்க வேண்டாம்,” என கேட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில், ஆளுநர் பில் மர்பி மாகாணத்தின் புகழ்பெற்ற கடற்கரை இப்புயலால் அழிந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

கனெக்டிகட்டில் ஞாயிற்றுக்கிழமை வரை பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. “ஆபத்தான நிலைமைகள்” காரணமாக, பல பாலங்களை மூடுவதாக ரோட் ஐலாண்ட் ஆளுநர் டேன் மெக்கே அறிவித்துள்ளார்.

எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் பனியில் உற்சாகமாக விளையாடுவதில் உறுதியாக உள்ளனர். நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க்கில், குழந்தைகள் பனிச்சறுக்கு வாகனங்களில் விளையாடினர். வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் பனிக்கட்டியை பந்தாக உருட்டி, ஒருவர்மீது ஒருவர் எறிந்து, பனிப்பந்து சண்டையில் ஈடுபட்டனர்.

பொதுவாக மிதமான குளிர்காலத்திற்கு பெயர் பெற்ற புளோரிடா, சில ஆண்டுகளில் குளிர்ச்சியான வெப்பநிலையைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உடும்புகள் நகர முடியாமல் மரங்களிலிருந்து கீழே விழும் நிலை ஏற்படும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!