உலகம்

அமெரிக்காவில் ஊபர் வாடகை கார் ஓட்டும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர்

91views

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதயமைச்சர் காலித் பயிண்டா அமெரிக்காவில் ஊபர் வாடகை கார் ஓட்டி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் முன்னாள் நிதியமைச்சருக்கு இந்த கதியா என்று நெட்டிசன்கள் பரிதாபம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அஷ்ரப் கானி தலைமையிலான அரசு நாட்டை நிர்வகித்து வந்தது. அப்போது நிதியமைச்சராக காலித் பயிண்டா செயல்பட்டு வந்தார்.

அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது தலிபான்கள் நாட்டை கைப்பற்றினர். அவர்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஆப்கன் ஆட்சி நிர்வாகத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்திலேயே வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள்.

ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், வெளிநாடுகளுக்கு சென்ற ஆப்கன் அறிஞர்கள் நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அஞ்சி யாரும் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற ஆப்கன் முன்னாள் நிதியமைச்சர் காலித், வாஷிங்டனின் ஊபர் வாடகைக்கார் ஓட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எனது குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டேன். நான் இப்போது வெறுமையாக உணர்கிறேன்.

நாங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஆப்கானிஸ்தான் சீட்டுக்கட்டு சரிந்ததைப் போன்று தலிபான்களிடம் வீழ்ந்து விட்டது. 6 மணி நேரம் ஊபர் கார் ஓட்டி 150 டாலர்கள் (ரூ. 12 ஆயிரம்)சம்பாதித்தேன். அமெரிக்காவில் நானும் எனது குடும்பத்தினரும் ஒன்றாக இருக்கிறோம்.’ என்று தெரிவித்தார்.

போரில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை மறு கட்டமைப்பு செய்வதற்கு உலக நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி அளித்தன. அவற்றை காலித் நிர்வகித்து வந்தார். அவருக்கா இப்படி நிலைமை என்று நெட்டிசன்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!