அபுதாபி விமானத்தில் பயணிக்க 11 பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களுக்கு அனுமதி மறுப்பு – காரணம் என்ன?
பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அபுதாபி செல்லவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பாணியில் பாகிஸ்தானில் 2016ம் ஆண்டு முதல் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. 6 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. கராச்சியில் வீரர்கள் பாதுகாப்பு வளையமான பயோ பபுளையும் மீறி சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்தது. இந்நிலையில் பிஎஸ்எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்எல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகத்தினர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு அபுதாபிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று தோஹா வழியாக அபுதாபிக்கு விமானம் மூலம் செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட அணி வீரர்கள், நிர்வாகத்தினரிடம் முறையான அனுமதி இல்லாத காரணத்தினால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5 வீரர்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்ததால் அவர்கள் விமானத்தில் ஏறினர், எஞ்சியவர்கள் ஹோட்டலுக்கு திரும்பினர்.
பிஎல்எல் தொடருக்காக அபுதாபிக்கு தனி விமானம் மூலம் வீரர்கள், அணி ஊழியர்களை அனுப்பி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்க முடிவை மாற்றியதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அபுதாபியில் தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் அதில் கலந்து கொள்ளும் வீரர்கள் அங்குள்ள சீதோஷ்ணத்திற்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகிறது.
பெஷாவர் அணியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரம் இது தொடர்பாக கூறுகையில், எங்கள் அணி வீரர்கள் தங்களின் உடல்வெப்பநிலையை பராமரிக்கும் வகையில் வீரர்களுக்கு இளநீர் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். வீரர்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் மற்றும் தசைப்பிடிப்பு அபாயத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும் பெரும்பாலான போட்டிகள் இரவு நேரத்தில் நடக்க இருப்பதால் அந்த ஆபத்து வீரர்களுக்கு ஏற்படாது என கருதுவதாக கூறினார்.