இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 30.33 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் இலவசத் திட்டத்தின் கீழும், மாநிலங்களின் நேரடிக் கொள்முதல் திட்டத்தின் கீழும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 28 கோடியே 43 லட்சத்து 40,936 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 1 கோடியே 89 லட்சத்து 86,504 தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளின் கைவசம் இருக்கின்றன. இதுதவிர, 21.05 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளுக்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.