தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 118 பேர் பலியாகினர்.
இவ்வாறு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தவுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், 45 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வழக்கறிஞர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.