மகாராஷ்டிராவில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள பிற அலுவலகங்களும் 15 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம்.
நகரங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மருத்துவ அவசரம் , அத்தியாவசிய சேவைகள் , இறுதி சடங்குகள் ஆகியவற்றிற்கு மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
புறநகர் ரயில் சேவைகளில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வோர் மட்டும் பயன்படுத்தலாம் என்றும் 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணங்களில் அதிகபட்சம் 25 பேருக்கு அனுமதி, அதுவும் திருமண நிகழ்ச்சியை இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.