உலகம்

அணுசக்திப் பேச்சுக்கு ஈரான் திரும்பாவிட்டால் ‘மாற்று’ நடவடிக்கை: அமெரிக்கா, இஸ்ரேல் எச்சரிக்கை

47views

அணுசக்திப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் திரும்பாவிட்டால் அந்த நாட்டுக்கு எதிரான ‘மாற்று’ நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரித்துள்ளன.

அமெரிக்கா வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லாபிடும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவித்தனா்.

இதுகுறித்து பிளிங்கன் கூறியதாவது:

வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் ஈரான் மீண்டும் பங்கேற்பதற்கான இறுதிக் கெடு நெருங்கி வருகிறது. அந்தக் கெடு முடிவடைவதற்குள் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் திரும்ப வேண்டும்.

இப்போதைய நிலைப்பாட்டை மாற்ற ஈரான் தவறினால், அந்த நாட்டுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய ‘மாற்று’ நடவடிக்கைகள் குறித்து கூட்டணி நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

ஈரான் அணு ஆயுதம் பெறும் அபாயத்தை எதிா்கொள்வதற்கான எல்லா வகையான உத்திகளையும் பரிசீலித்து வருகிறோம்.

இந்த விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதுதான் அதிக பலனை அளிக்கும் என்று இப்போதும் நம்புகிறோம். ஆனால், பேச்சுவாா்த்தையைப் பொருத்தவரை அதில் இரு தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இப்போதைய நிலையில் ஈரான் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றாா் பிளிங்கன்.

அப்போது பேசிய யாயில் லாபிட், ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தேவைப்பட்டால் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேல் தயங்காது.

தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க நாடுகள் ராணுவ சக்தியைப் பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருவதுதான்.

ஈரான் போன்ற பயங்கரவாத அரசு அணு ஆயுதம் பெறுவதை இந்த உலகம் அனுமதிக்காது என்பதை ஈரானுக்குப் புரியவைக்க வேண்டும். அதனை உணராதவரை, அந்த நாடு அணு ஆயுதத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடா்ந்துகொண்டுதான் இருக்கும்’ என்றாா்.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் நீண்ட காலமாக இருந்து வந்த பகையை நீக்கி, இரு தரப்புக்கும் இடையே அமெரிக்கா முன்னிலையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான திட்டம் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்டது.

‘ஆப்ரஹாம் உடன்படிக்கை’ என்றழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் செயலாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லாபிடும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸாயெத் அல் நஹ்யான் ஆகியோா் வாஷிங்டன் வந்திருந்தனா்.

அவா்களது சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஆன்டனி பிளிங்கனும் யாயிா் லாபிடும் இவ்வாறு தெரிவித்தனா்.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொமனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஈரானில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபா் தோதலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றாா். அதையடுத்து, புதிய அரசு அமையும் வரை வியன்னா பேச்சுவாா்த்தையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது அந்தப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக ஈரான் கூறினாலும், அதற்கான தேதியை அறிவிக்காமல் உள்ளது.

இந்தச் சூழலில், ஈரான் விரைவில் பேச்சுவாா்த்தைக்கு வராவிட்டால் ராஜீய ரீதியில் அல்லாத பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது எச்சரித்துள்ளன.

ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, ரகசிய அல்லது வெளிப்படையான ராணுவ நடவடிக்கைகள் என பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அந்த நாடுகள் பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!