தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தால் அவதிப்படும் அக்சர் படேல், ஜடேஜா, சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை.
தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியினர் 16ல் கிளம்பிச் செல்லவுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் போட்டி, ‘பாக்சிங் டே’ டெஸ்டாக செஞ்சுரியனில் நடக்கவுள்ளது. அடுத்து 2022, ஜன. 3-7 (ஜோகனஸ்பர்க்), ஜன. 11-15ல் (கேப்டவுன்) போட்டிகள் நடக்கவுள்ளன.
இதற்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கோஹ்லி நீடிக்கிறார். மோசமான ‘பார்ம்’ காரணமாக மும்பை டெஸ்டில் இடம் பெறாத ரகானேவுக்குப் பதில் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், சிறிய இடைவெளிக்குப் பின் ஹனுமா விஹாரி அணிக்கு திரும்பினர். நியூசிலாந்து தொடரில் அசத்திய மயங்க் அகர்வால், ஸ்ரேயாசிற்கும் அணியில் இடம் கிடைத்தது.
பும்ரா வருகை
வேகப்பந்து வீச்சில் ‘சீனியர்’ முகமது ஷமி, பும்ரா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தனர். இவர்களுடன் உமேஷ் யாதவ், மும்பை டெஸ்டில் ஜொலித்த முகமது சிராஜுடன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் அசத்திய ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டார். சுழலில் ‘சீனியர்’ அஷ்வினுடன், ஜெயந்த் யாதவ், தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்கும் இந்திய ‘ஏ’ அணியின் சவுரப் குமார் (45 முதல் தர போட்டிகளில், 194 விக்.,), தேர்வு செய்யப்பட்டனர்.
ஜடேஜா இல்லை
அன்னிய மண்ணில் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறும் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, அணியில் சேர்க்கப்படவில்லை. முழங்கை வீக்கத்தால் அவதிப்படும் இவர் காயம் சரியாக நீண்ட நாள் தேவைப்படும். ஒருவேளை ஆப்பரேஷன் செய்தால், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., தொடருக்குத் தான் தயாராக முடியும்.
சொந்தமண்ணில் இங்கிலாந்து (27 விக்.,), நியூசிலாந்து (9) டெஸ்ட் தொடரில் அசத்தியவர் அக்சர் படேல். ஆனால் லேசான எலும்பு முறிவால் அவதிப்படும் இவரது காயம் சரியாக 6 வாரம் தேவைப்படும். துவக்க வீரர் சுப்மன் கில் (முழங்கால், முழங்கை) காயத்தால் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை. மோசமான ‘பார்மில்’ இருந்தாலும் இஷாந்த் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்தது..
அணி விபரம்:
கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், சகா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், பும்ரா.
மாற்று வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சகார், அர்ஜான் நாக்வாஸ்வால்லா.
ரோகித் சர்மா கேப்டன்
இந்தியாவின் மூன்று வித அணிக்கும் கேப்டனாக இருந்தவர் கோஹ்லி. சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடருக்குப் பின் இவர் விலகிக் கொள்ள, ரோகித் சர்மா ‘டி-20’ கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடரை 3-0 என வென்று காட்டினார். தென் ஆப்ரிக்க மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடரில் கோஹ்லி கேப்டனாக தொடர்வார் என நம்பப்பட்டது.
திடீர் திருப்பமாக ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோஹ்லி டெஸ்ட் அணி கேப்டனாக மட்டும் தொடர்வார்.
அட்டவணை
தேதிபோட்டிஇடம்
டிச. 26-30முதல் டெஸ்ட்செஞ்சுரியன்
ஜன. 3-7, 20222வது டெஸ்ட்ஜோகனஸ்பர்க்
ஜன. 11-153வது டெஸ்ட்கேப்டவுன்
ஜன. 19முதல் ஒருநாள்பார்ல்
ஜன. 212வது ஒருநாள்பார்ல்
ஜன. 233வது ஒருநாள்கேப்டவுன்
* முதல் இரு டெஸ்ட் மதியம் 1:30 மணி, 3வது டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் 2:00 மணிக்கு துவங்கும்