நாட்டு சரக்குனாலே சும்மா குப்புனு ஏறும்… ஃபாரின் சரக்குனா சொல்லவா வேணும். இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்புசாமி, ஃபாரின் சரக்குனு படத்திற்கு வித்தியாசமான தலைப்பு வைத்து இயக்கி உள்ளார்.
இப்படத்தில் அப்ரினா, இலக்கியா, ஹரிணி என்ற மூன்று பெண்களும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
சிவநாத் ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைக்க, பிரகாஷ் ராஜ்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார். டி.எம்.சரத்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ஃபாரின் சரக்கு என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி, படிக்கும் போதே சினிமா மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. இதனால் பல குறும்படங்களை இயக்கி உள்ளேன்.
கப்பல் பணியில் சேர்ந்த போது, எனது நண்பர்களான சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது அர்வமாக இருந்தனர். இதனால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுத்த பிறகு, திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. எங்கள் மூன்று பேருடைய முயற்சியில் உருவாகியிருக்கிறது ஃபாரின் சரக்கு.
படத்தின் தலைப்பு மற்றும் டீசர் பாராட்டு பெற்று வரும் நிலையில், சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிட்ட சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது தான் கதையின் மையப்புள்ளி. குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இது தான் ‘ஃபாரின் சரக்கு படத்தின் கதைச் சுருக்கம்.
அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாக மட்டும் இன்றி ரசிகர்களிடமும், தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், காதல், பாடல் என்று வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஃபாரின் சரக்கு திரைப்படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.