தமிழகம்

உலக மூத்தோர் நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப நடை பேரணி

104views
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு ,ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி’ எழுச்சியோடு ந‌டைபெற்றது. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், ஆசிரியர்கள் என சுமார்‌‌ 1200 பேர் பங்கேற்ற இந்நிகழ்வை தேசிய நடைப் பந்தய வீரர் ஹனீஃபா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய நடை பேரணி, காந்தி மண்டபம் சாலை, ‌பொன்னியம்மன் கோயில் தெரு, ஆர்.எஸ். ஶ்ரீதர் தெரு, லாக் தெரு, ஏரிக்கரை சாலை வழியாகச் சென்று மீண்டும் அப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. புகை மாசு மற்றும் ஒலி மாசு ஆகியவற்றைத் தவிர்க்க வலியுறுத்திய ஏ.எம்.எம். வாக்கத்தானின் மொத்த பயண தூரம் 5 கிலோ மீட்டர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் இளைப்பாறிச் செல்ல வசதியாக வழித்தடத்தில் 4 இடங்களில் புத்துணர்ச்சி பானங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு, சுகாதார பரிசோதனை முகாம், குருதிக் கொடை முகாம், இதயவியல் மருத்துவர் டாக்டர் அருளின் கருத்துரை ஆகியன இடம்பெற்றன. பேரணியில் பங்கேற்ற அனைவரும் உறுப்பு தானம் செய்வது, மரங்களை வளர்ப்பது, மூத்தோர்களை போற்றுவது, ஜீரோ கார்பன் நிலையை உருவாக்க முயற்சிப்பது, உடல் நலனில் அக்கறை செலுத்துவது என 5 கருத்துக்களை உறுதிமொழியாக ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மெய்யம்மை வெங்கடாச்சலம், முதல்வர் மகாலட்சுமி, துணை முதல்வர் துஷ்யந்தன், செழியன் குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!