தமிழகம்

சாத்தூர் அருகே நடைபெறும் அகழ்வாராய்ச்சியில், தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

78views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை – விஜயகரிசல்குளம் பகுதியில், 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி உள்ளிட்ட மிகப் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகழாய்வு பணியின் போது 2 கிராம் எடையுள்ள தங்க பட்டை ஒன்றும், 2.2 கிராமில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழாய்விலும் மிகப் பழமையான சில தங்கப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது 2ம் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன்கள் கிடைத்திருப்பது தொல்லியலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்று இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்கள் மூலமாக அறிய முடிகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் மேலும் பல அரிய வகை பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும், வரலாறு ஆராய்ச்சியாளர்களும் மகிழ்ச்சியுடன் கூறினர். விஜயகரிசல்குளம் அகழாய்வில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்கள் அனைத்தும் வெம்பக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!