தமிழகம்

செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி பலி

141views
வேலூர் கணியம்பாடி அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர்.
வேலூர் கணியம்பாடி புதூர் அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீஸார்  வழக்குப்பதிவு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(40). இவரது மனைவி அமுல்(30). இந்த தம்பதிக்கு சந்தியா(16), சினேகா (14), அரவிந்த் (12) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்குச் சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது. மேலும், சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்பாய் மூடப்பட்டிருந்தது. அப்போது, தெய்வசிகாமணி, அமுல் ஆகியோர் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் தங்கியுள்ளனர்.
இதனிடையே, திங்கள்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் கணியம்பாடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்மழையின் காரணமாக சூளை மூடப்பட்டு இருந்த தீ அணைந்து புகை மண்டலம் சூழ்ந்தது. அப்போது கிளம்பிய புகையானது அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் பரவியது. இந்த புகை மூட்டத்தால் அருகில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டுள்ளனர். பலத்த மழை காரணமாக அவர்களது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இவர்களது அருகிலுள்ள மற்றொரு சூளையின் உரிமையாளர் சீனிவாசன் அந்த வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அமுலுவின் முனகல் சத்தம் கேட்டதை அடுத்து சீனிவாசன் உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தெய்வசிகாமணி, அமுலு ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையிலிருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் செந்தில், காவல் ஆய்வாளர் ராஜன்பாபு உள்பட வருவாய்த்துறை, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!