தமிழகம்

வாழ்க்கையில் மன அமைதி பெற இதுவே வழி – திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு

214views
வாழ்க்கையில் மன அமைதியுடன் வாழ, துறவு மன நிலையே உதவும் என ஆன்மிக பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.
‘மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம்’ அமைப்பு சார்பில், எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே., கல்யாண மண்டபத்தில் ‘மகா பெரியவா ஆராதனை’ சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ‘உறவும் துறவும்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது;
துறவு நெறி, துறவிகளுக்கு மட்டுமானது அல்ல. இந்து மதத்தை பொறுத்தவரை துறவு நெறி எல்லோருக்குமானது. பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நிலைகள் அமைகின்றன. பிரம்மச்சாரியாக இருந்து, பின்னர் மண வாழ்க்கை மேற்கொண்டு குறிப்பிட்ட வயதிற்கு பின் அனைவருமே துறவு மனப்பான்மையோடு வாழ வேண்டும்.
துறவு வாழ்க்கைக்காக குகைக்கு போய் தவம் புரிய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் அல்லது இருக்கும் இடத்திலிருந்து தவ வாழ்வில் ஈடுபட வேண்டும். புராணங்களில் அரசர்கள் வாரிசுகளுக்கு முடி சூட்டிய பின் கானகம் சென்று தவம் புரிந்ததாக படிக்கிறோம்.
குந்தி தேவி, காந்தாரி, திருதராஷ்டிரர் எல்லோரும் இறுதிக்காலங்களில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான். ஆதிசங்கரர், விவேகானந்தர், பரமாச்சாரியார் போல மணம் புரிந்து கொள்ளாத துறவியரும் உண்டு. அரவிந்தர், வள்ளலார் போல மணம் புரிந்து வாழ்வில் ஈடுபடாமல் துறவியானவரும் உண்டு.
ராகவேந்திரர், புத்தர் போல குழந்தை பெற்றுக் கொண்டபின் துறவியானவர்களும், பெண்களில் சாரதா தேவி, சக்கரையம்மா, ஆனந்தமயி, ஆண்டவன் பிச்சி போன்ற துறவிகளும் உண்டு.
ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முதிர்ந்த பகுதியில் மனப்பக்குவம் அடைந்து துறவு மனம் பெற வேண்டும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாதிருக்க முதியவர்கள் துறவு மனநிலையை மேற்கொள்வதும், ஆன்மீகத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் உதவும்.
‘மண வாழ்வில் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பிரம்மச்சரியம் அனுசரிக்க வேண்டும்’ என மகாத்மா காந்தியின் கோட்பாடும் துறவை வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் துறவு மனநிலை நோக்கி பயணப்பட்டு மன அமைதி பெறுவோம்” இவ்வாறு பேசினார்.
அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். இன்று மாலை நடக்கும் வைபவத்தில், காஞ்சி ஸ்ரீமகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!