தமிழகம்

திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 வயது மகள் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது – உயிரிழந்த சிறுமியின் சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

148views
திருமங்கலம் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமி என்பவரது 2 பிள்ளைகளை தோட்டத்தில் நல்ல பாம்பு கடித்தது. மயங்கிய சிறுமிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நான்காவது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி நாகலட்சுமி., பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவரை ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர் உட்பட 3 பேர் பணி செய்ய விடாமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால் நாகலட்சுமி கடந்த ஏப்ரல் மாதம் சிவரக்கோட்டை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இறந்த நாகலட்சுமிக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி இறப்புக்கு பின் குழந்தைகளை தந்தை கணேசன் பராமரித்து வருகிறார். கணேசன் நேற்று வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு தனது இரண்டாவது மகள் விஜயதர்ஷினி 9 நான்காவது மகள் சண்முகப்பிரியா 4 இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். கணேசன் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு சிறுமிகளும் தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தொட்டியின் அருகே இருந்த புதருக்குள் இருந்து திடீரென வெளியே வந்த பாம்பு இரண்டு சிறுமிகளையும் கடித்தது.
இதனால் இரு சிறுமிகளும் அலறி துடித்து மயங்கி விழுந்துள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கணேசன் மயங்கி நிலையில் கிடந்த பிள்ளைகளை கண்டு அதிர்ச்சியுற்றார். காரணம் குறித்து ஆய்வு செய்தபோது அப்பகுதியில் நான்கடி நீள நல்ல பாம்பு ஒன்று சென்றதைக் கண்டு பாம்பு கடித்ததால் பிள்ளைகள் மயங்கி விழுந்துள்ளனர். நல்ல பாம்பு என்பதை அறிந்து பாம்பை கொன்று விட்டு கணேசன் இரண்டு பிள்ளைகளையும் உறவினர்கள் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு இரண்டு சிறுமிகளுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நான்கு வயது சிறுமி சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இரண்டாவது மகள் விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐந்து குழந்தைகளின் தாய் நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு மறைவதற்குள் அவரின் நான்காவது மகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் மையிட்டான்பட்டி கிராமத்தில் மேலும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் சிறுமிகளை பாம்பு கடித்த சம்பவம் அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!