தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க குருதி கொடையாளர் தின விழா

88views
வரலாற்று சிறப்பு மிக்க தென்காசி மாவட்டத்தின் முதல் உலக குருதி கொடையாளர் தினவிழா தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குருதி தான தன்னார்வ அமைப்புகள் மற்றும் குருதி கொடையாளர்களை பாராட்டி கவுரவித்தார். சர்வதேச குருதி கொடையாளர் தினம் ஜூன்.14 அன்று ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தன்னார்வ குருதி கொடையாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வ குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் தென்காசியில் இவ்விழாவை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து தென்காசி இணை இயக்குநர் Dr. பிரேமலதா MD., DGO. வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr. R. ஜெஸ்லின் சீரிய முயற்சியில் வரலாற்று சிறப்பு மிக்க தென்காசி மாவட்டத்தின் முதல் உலக குருதி கொடையாளர் தினவிழா தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் கலந்து கொண்டு ஆண் மற்றும் பெண் தன்னார்வ குருதி கொடையாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து சிறப்பித்தார்.

2022-23 ஆண்டில் அதிக அளவில் இரத்ததான முகாம்களை ஏற்படுத்திய தென்காசி ஜெ.பி கல்லூரி மற்றும் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கலை கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களுக்கான விருதை பெற்றன. ஒரே இரத்ததான முகாமில் அதிக எண்ணிக்கையில் இரத்தம் வழங்கிய இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் அனைத்து இரத்ததான கூட்டமைப்பும் பாராட்டு சான்றிதழ் பெற்றன.மேலும், சுமார் 75 தன்னார்வ குருதி கொடையாளர்கள் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து ஏழை எளிய நோயாளிகளுக்கு தன்னார்வமாக முன் வந்து 2022-23 ம் ஆண்டில் அதிகமுறை இரத்த தானம் வழங்கிய செவலியர் ஏஞ்சல்ராணி, நுண்கதிர் நுட்புனர் சகாயராஐ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தென்காசி அரசு இரத்த வங்கி நிலையத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய இலத்தூர் மற்றும் கடையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விருதை பெற்றன. மேலும் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களும் இவ்விழாவில் கவிரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவிற்கு Dr P. பிரேமலதா MD,DGO., இணை இயக்குநர் நலப்பணிகள் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் Dr. முரளிதரன் DPH. முன்னிலை வகித்தார். சங்கரன் கோவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr. செந்தில் சேகர் DCH வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் எஸ்.எஸ். ராஜேஷ், மூத்த மருத்துவர்கள் கீதா, லதா, விஜயகுமார், கார்த்திக் அறிவுடை நம்பி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, முத்துலட்சுமி, செவிலியர்கள் சீதா, கோகிலா, உத்தமவர்த்தினி, சுதா, உமா, ஆயிஷா, அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருடன் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான குருதிக் கொடையாளர்களும், குருதி முகாம் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தென்காசி குருதி நிலைய மருத்துவர் பாபு, விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக குருதிக் கொடையாளர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த காரணமான இணை இயக்குனர் நலப் பணிகள் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ், மற்றும் தென்காசி ரத்த வங்கி மருத்துவர் பாபு ஆகியோரை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!