தமிழகம்

சிவகாசி அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டும் விழா… எம்.எல்.ஏ. தகவல்

74views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மிகப் பெரும் தொழில் மற்றும் வர்த்தக நகராக இருந்து வருகிறது. தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் என பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகள், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் சிவகாசி பகுதியில் வாகனங்களின் பயன்பாடு மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கு சரக்குகள் கொண்டு வருவதற்கும், தயாரான சரக்குகள் வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கும் தினமும் பல நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சிவகாசி பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் இங்கு நள்ளிரவு நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் வாகனங்களின் சத்தமும், இரைச்சலும் கேட்டபடியே இருக்கும்.
சிவகாசி நகருக்குள் வரும் பிரதான சாலைகளான விருதுநகர் சாலை மற்றும் திருவில்லிபுத்தூர் சாலைகளில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் வாகன, போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். அதிலும் ரயில் வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கும் போது அந்த சாலையை கடக்க குறைந்தது 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும். இந்த தினசரி அவதியை தவிர்ப்பதற்காக, திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பின்பு தற்போது தான் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பாக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் கூறும்போது, திருத்தங்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு தலைமையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கும். இதனயடுத்து அடுத்த 2025ம் ஆண்டு சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்படும் என்று எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!