113
டீன்ஸ் –திரை விமர்சனம்
எதையும் வித்தியாசமாக அணுகவேண்டும் என்று நினைக்ககூடிய பார்த்திபனிடம் இருந்து வந்திருக்கும் திரைப்படம் டீன்ஸ்.
தங்களை பெரியவர்களாக நடத்தவேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லையே என்று ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்கள், இவர்களுக்கு ஏதோ அடைவைஸ் செய்ய போகிறாரோ பார்த்திபன் என நினைத்தால் படம் வேறு திசை நோக்கி பயணிப்பதில் ‘அட’ என சொல்ல வைக்கிறார் மனிதர்.
தன் பாட்டி ஊருக்கு சென்று பேயை பார்க்க கிளம்பும் பதின்மூன்று பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கொஞ்சம் கிராபிக்ஸ், கொஞ்சம் ஆணவக்கொலை, கொஞ்சம் வேற்று கிரகம், கொஞ்சம் நாசா, கொஞ்சம் கோல்டன் பிளேட் இப்படி அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகிறது படம்.
குழந்தைகளின் உலகம் எப்போதும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல. என்னதான் அட்வான்ஸ் சொசைட்டியில் வசித்தாலும் அங்கும் மூட நம்பிககைகளுடன் தான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லும் லாவகம் அருமை.
முதல் பாதிவரை பார்த்திபனைத் தேடி எல்லோரும் ஜேம்ஸ் பாண்டாக மாற, இரண்டாம் பாதியில் நான் இருக்கிறேன் என்பதாக அவர் அறிமுகமாகும் காட்சியில் நிறைய மெனக்கெடலைப் பார்க்க முடிகிறது.
ஏலியனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கேள்வியில் இருக்கும் நியாயம் ஆஸ்ட்ரோ பிசிசிஸ்ட் இப்படித்தான் உடை உடுத்துவார் என்று அர்த்தப்படுத்துவதில் நமக்கு வரும் நமட்டு சிரிப்பை நாம் அடக்கிக் கொள்ளத் தான் வேண்டும்.
செக்ஸ் பற்றி பேசும் குழந்தைகள், சரக்கடிப்பதில் ஆர்வம் காட்டும் பிள்ளைகள் என எல்லாவற்றிலும் மேல்தட்டு நாகரீகத்தின் வெளிப்பாடு. சாமி கும்பிடும் குழந்தைகளையும், பேய் பிசாசுளை பார்த்து பயப்படும் குழந்தைகளென ஒரே கேட்டகிரியில் கொண்டு வந்திருப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
தன் திறமை மீது எப்போதும் அசாத்தியமான நம்பிக்கையில் இருக்கும் பார்த்திபனுக்கு தமிழ் சினிமா வியாபாரத்திற்கு யோகிபாபு தேவைப்பட்டிருக்கிறார். இன்பமகாதேவிக்காக புலம்பும் பாத்திரத்தில் யோகிபாபு. பார்த்திபனுடன் பேசும் இடங்களில் வடிவேலு தெரிகிறார்.
ஒளிப்பதிவில் பெரிதாக கவராத படம் கிராபிக்சில் அப்படியே அச்சு முறிந்து விழுகிறது.
இசையமைப்பாளர் டி.இமான் டைட்டில் பாடலும், இறுதியில் வரும் ராப் பாடலும் தந்து ஏதோ தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
படத்தில் என்னதான் சொல்ல வருகிறார் என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு அனேகமாக இரண்டாம் பாகத்தில் விடைகிடைக்கலாம்.
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் கொட்டிக்கிடக்கும் கேள்விகளும் அதற்கான விடைகளுமாக படம் முழுக்க பார்த்திபனிசத்தை பதியன் போடாத கெட்டிக்காரத்தனத்திற்கு பார்த்திபனுக்கு ஒரு பாராட்டு.
‘அய்யன்காளி’ என்கிற பெயரை பயன்படுத்தியிருப்பதில் பார்த்திபனின் உள்ளரசியலை உணரமுடிகிறது.
டீன் ஏஜ் பிள்ளைகளின் பார்வையில் பேச வைத்து விஷயங்களின் வீரியத்தை அலசியிருப்பதில் தனித்து தெரிகிறார்.
டீன்ஸ் – பார்க்கலாம் , விரைவில் இரண்டாம் பாகம் வரும் என்கிற நம்பிக்கையில்.
RJ நாகா
add a comment