விமர்சனம்

ஜிமிக்கி : நவீன நாடகத்தின் அதீதம்

302views
ஜிமிக்கி
கொலுசு, வளையல், கம்மல், மூக்குத்தி, என்று எத்தனையோ இருந்தாலும் மெட்டி மட்டுமே கல்யாணத்திற்கு பிறகு என்றான நிலை.
இன்றைய நாகரீக உலகில் ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டு காதுகளில் ஜிமிக்கியுடன் வலம்வரும் யுவதிகளும், மெட்டியை பேஷனுக்காக அணிய ஆரம்பித்திருக்கின்றனர்.
ஜிமிக்கி – இன்றைய நவீன உலகின் பெண்குறித்தான ஒரு புனைவு. அது ஒரு குறியீடு என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வு பெறுகிறார் துளசி. அவரின் அருமை பெருமைகளை எல்லாம் மாணவர்கள், பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வயதில் இவளுக்கு எதற்கு காதுகளில் ஜிமிக்கி … என்று அங்கிருந்த பணிப்பெண்ணின் கேள்வியில் அறுபது ஆண்டுகள் பின்னோக்குகிறது வாழ்க்கை.
துளசி அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி. தகப்பன் மகா குடிகாரன். திருமணவயதை தாண்டிய ஒரு சகோதரி. அப்பன்காரன் வாங்கிய கடனுக்கு வயது போனவனுக்கு வாக்கப்படவேண்டிய நிலைமை.
கையில் குழந்தை, தாய் தகப்பன் இறப்பு, வீட்டிற்கே வராத கணவன் என சோகத்தில் தடுமாறுகிறது துளசியின் வாழ்க்கை. தடைப்பட்ட கல்வியை தொடர டெல்லியில் வேலை, படிப்படியாக சம்பள உயர்வு, என வாழ்க்கை அவளை இன்னுமொரு வடிவத்திற்குள் இட்டு செல்கிறது.
உன் மகனுக்கு நல்ல தகப்பனாக இருப்பேன்..என்ற ஒற்றை வார்த்தையில் வீழ்த்தி விடுகிறது அவளின் எல்லா சகலத்தையம். ஆண் சமூகத்தால் சுரண்டப்படுகிறாள் துளசி. தகப்பன், கணவன், வந்தவன், பெற்றவன் என எல்லோரும் தங்கள் தேவைகளை முன்வைத்தே பழகுவதால் ஒவ்வொருமுறையும் சிலுவையில் அறையப்படுகிறாள் துளசி. மொழி தெரியாத ஊரில் துளசி ஒரு அகராதியாக மாறுவதை எதார்த்த சம்பவங்களின் பின்னணியில் திரையில் காட்சிகளாக படரவிட்டு நம்மை அசைத்துப் பார்க்கிறது இந்த ஜிமிக்கி.
வசந்தன் நூலகம் வழங்கும் “ஜிமிக்கி” – நவீன நாடகம் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை சென்னை தி நகர் வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்தியாலயா வினோபா அரங்கத்தில் நடைப்பெற்றது.
முகமூடி அரங்க குழுவினரால் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் 10 நாள் பயிற்சியில் உருவானது என்றால் ஆச்சரியம்தான். 90 சதவீதம் நாடகப்பயிற்சில் கலந்துகொண்ட புதியவர்கள் அனைவரும் கல்லூரி இளைஞர்கள். பயிற்சியில் எல்லோரும் வென்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு சிலர் முழுநேர தொழில்முறை கலைஞர்களாக வர சாத்தியங்கள் இருக்கிறது.
தொடக்கம் பறையிசையுடன் மேடையை தன் வயப்படுத்தினார் இயக்குனரில் ஒருவரான ஜானகி.
ஏன் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்கிற சுய விவரணையை கதாசிரியர் சுதா பகிர்ந்து கொண்டார்.
நாடக பிரதியை தன் உடல்மொழியில் கடத்திய எல்லோரையும் தனிப்பட்டவிதத்தில் பாராட்ட வேண்டும். ஒருவர் ஒரு வேடம் என்றில்லாமல் பல வேடங்களை காட்சிக்கு ஏற்றார் போல மாற்றி தன்னை வெளிப்படுத்திய தன்மையில் குடிகார தந்தையாக நடித்த தோழனும், இட்டிலிக்கார அம்மாவாக வரும் தோழியும் பார்வையாளர்கள் மனதில் நிறைந்து விடுகின்றனர்.
துளசியாக நடித்திருக்கும் தோழி உண்மையில் அந்த பாத்திரமாகவே மாறியிருப்பது அற்புதம். அவரின் தோழியாக வரும் மானசா நல்ல பாத்திரப் படைப்பு. இயல்பாய் வந்து போகிறார். துளசியை ஏமாற்றும் கணக்கு பேராசிரியராக வரும் தோழர் ஒரு சில நேங்களில் நடிகர் ரகுவரனை கண் முன் கொண்டு வந்து சேர்க்கிறார்.
ஒளிஒலி அமைப்பு மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை. வெள்ளை சுவரை தன் உணவர்வுகளுக்கான கேன்வாசாக மாற்றிக்கொண்டிருப்பது அருமை.
ஒரு இந்தி பாடலுக்கு நடனம் ஆடி சென்றவரும் மனதில் நிற்கிறார். காட்சிகளுக்கு ஏற்ப பின்னணியில், இசையுடன் கூடிய பாடலை ஒலிக்க விட்டிருப்பதில் கூடுதல் கவனம் தெரிகிறது. லைவ்வாக எல்லாவற்றையும் பார்வையாளர்களுக்கு கடத்தும் இந்த நாடக சித்தாந்தத்தின் புரிதல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நாடகம் நடந்துக் கொண்டிருக்கும் போதே பார்வையாளர்கள் மத்தியிலிருந்து வசனம் பேசியபடி செல்லும் கதாபாத்திரங்கள் புது வித அனுபவம்,
மெகா சீரியல்களில் சிக்குண்டு கிடக்கும் தமிழக மக்களை இந்த மாதிரியான நாடகங்களை பார்க்க செய்வதன் மூலம், உளுத்துப்போன மூளையை கொஞ்சம் புது சிந்தனைகளின் கஜானாவாக்கலாம்.
சாரதி – ஜானகி இருவரின் இயக்கத்தில் பண்பட்ட நவீன நாடக கூறுகளை பார்க்க முடிகிறது.
எதையெல்லாம் பேசாமல் விட்டோமோ அதையெல்லாம் ஒருகணம் அதிர்ந்து பேசிவிட்டு செல்கிறது “ஜிமிக்கி”
ஜிமிக்கி – அரசியல் பேசுமா…பேசும் . மிக நுணுக்கமாக பெண்ணரசியல் பேசுகிறது இந்த “ஜிமிக்கி”
RJ நாகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!