தமிழகம்

ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் – கவுன்சிலரை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

35views
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளித்த புகாருக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி நகராட்சி திமுக கவுன்சிலரை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 24 வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டு மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் 10 தினங்கள் முதல் 13 தினங்களுக்கு ஒரு முறை, நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கிய நிலையில் துர்நாற்றம் மிகுந்து இருந்துள்ளது. தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படவே, இது குறித்து 24 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வலட்சுமிக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பொது மக்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே ஆத்திரம் அடைந்த 24 வது வார்டு பொது மக்கள் ஒன்று திரண்டு கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டில் இருந்து வெளியே வந்த கவுன்சிலரையும் முற்றுகையிட்ட பொது மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே சுகாதார சீர்கேடு காரணமாக பொது மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தினர்.
இதனை அடுத்து பொது மக்களை சமாதானப்படுத்திய கவுன்சிலர் செல்வலட்சுமி, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், காலை உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
பொது மக்களின் இந்த போராட்டத்தால் மலையடிப்பட்டி பகுதியில் சுமார் 1 மணி நேரம் வரை பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!