தமிழகம்

அதிகாரம்படைத்த பலரின் உதவியோடு மக்களைப் புறக்கணித்த ஊராட்சி மன்றத்தைப் புறக்கணித்து பொட்டலூரணியில் நடத்திய “மக்கள் கிராம சபைக் கூட்டம்”

226views
கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரித் தொடர்ச்சியாகப் போராடி ஒட்டுமொத்த மக்களும் தேர்தலைப் புறக்கணித்த ஊர்; வாக்களிக்க மறுத்த மக்களைத் தாக்குவதற்காக ஆளும் அமைச்சரால் கூலிப்படை ஏவப்பட்ட ஊர்; கூலிப்படையை ஏவியவர்மீது புகார் அளித்த மக்கள்மீது இதுவரை நான்கு பொய் வழக்குகள் போடப்பட்ட ஊர்; என்பதுவரை ஓரளவிற்கு தமிழ்நாடு அறிந்த ஊர் பொட்டலூரணி. இவ்வூர், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டது. எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில், பொட்டலூரணி கிராமம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டது.
எல்லைநாயக்கன்பட்டிஊராட்சி எல்லைக்குள் உள்ள நான்கு கிராமங்களில் பொட்டலூரணி மட்டுமே 45 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாகும். மொத்தமுள்ள 9 வார்டுகளில் 4 வார்டுகள் பொட்டலூரணி கிராமத்தில் மட்டுமே உள்ளன. அதுவும் ஏற்கெனவே இருந்த 5 வார்டுகளைத் திட்டமிட்டு 4 வார்டுகளாக மாற்றிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரு கூட்டங்கள் மட்டுமே பொட்டலூரணியில் நடத்தப்பட்டன.
பொட்டலூரணியில் நடத்தச் சொல்லி மக்கள் எவ்வளவோ கேட்டும், ஊராட்சிச் செயலர் பொட்டலூரணியில் நடத்த முடியாது என்று கூறிவிட்டார். கிராமசபைக் கூட்டத்திற்கு, முன் அறிவிப்பினையும் முறையாகக் கொடுப்பதில்லை. அதனையும் தாண்டி ஏதோ வழியில் தெரிந்துகொண்டு வெளியூரில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்திற்குச் சென்று, தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றக் கோரினால், காவல் துறையை வைத்து, கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த பொட்டலூரணி கிராம மக்களை வெளியேற்றிவிடுவர். விதிகளை மீறி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டதைப் பற்றாளர்களும் கண்டுகொள்வதே இல்லை.

இது தொடர்பாக ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்க்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைவெண் வரம்பு (கோரம்) இல்லாமலே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதிக மக்கள் விருப்பமாகக் கலந்து கொள்ளும் பொட்டலூரணியில் நடத்தப்படுவதில்லை.
எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சிச் செயலர்தான் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். திரு.பேச்சிமுத்து என்பவரே, ஊராட்சிச் செயலராக ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக ஜூலை 15 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்ப்பு நாள் விண்ணப்பமும் 18 அன்று, உள்ளாட்சித் துறை அரசுச் செயலாளர் வரை தொடர்புடைய ஆறு அலுவலர்களுக்கும், 2024 ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தைப் பொட்டலூரணி கிராமத்தில் நடத்தவேண்டும் என்று முறையாகக் கோரிக்கை அனுப்பப்பட்டது. எதையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எல்லாவற்றையும் மீறி, ஆகஸ்ட் 15 கிராமசபைக் கூட்டத்தை செட்டிமல்லன்பட்டியில் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
முற்றும் முழுதுமாக ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பொட்டலூரணியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஜனநாயகப் படுகொலை நிகழ்வுகள் வெளி உலகிற்கு வந்துவிடாமல் அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த மக்களும் தேர்தலைப் புறக்கணித்த நிலை குறித்து தேர்தல் ஆணையம் உள்ளிட்டன எந்த விசாரணையும் செய்ய முன்வரவில்லை; வாய் மூடி கிடக்கின்றன. பல புலனாய்வு ஊடகங்களைக் காணவே இல்லை. ஆகப் பெரும்பான்மையான ஊடகங்களில் பொட்டலூரணி செய்திகள் வெளியிடுவது தடுக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க மறுத்த ஒட்டு மொத்த மக்களைக் கொல்ல கூலிப்படையை அனுப்பிய அமைச்சரைப் பற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை. பிள்ளைகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்ட நிலை குறித்து, உரிய விசாரணை இல்லை.
இந்த நிலையில்தான் பொட்டலூரணி ஊர்ப் பொதுமக்கள் ஒன்றுகூடி 2024 ஆகஸ்ட் 15 இன்று காலை 10 மணிக்கு பொட்டலூரணி கிராமத்தில் “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் ஒரு கிராம சபைக் கூட்டத்தை மக்கள் நடத்தினர். மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், பொட்டலூரணியை உள்ளடக்கிய எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தைச் சார்ந்த ஒன்பது உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதே நாளில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக செட்டிமல்லன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். பொட்டலூரணி பொதுமக்கள் திடீரெனக் கூட்டமாக வந்து கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்லிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில், செட்டிமல்லன் பட்டியில் ஊரக உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் படை குவிக்கப்பட்டிருந்தது.
பொட்டலூரணி மக்கள் நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் ஐவர் துணையோடு பொதுமக்கள் ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தீர்மானங்கள் :
1. பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் நிறுவங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.
2. பொட்டலூரணி பொதுமக்கள்மீது போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் திரும்பப்பெறவேண்டும்.
3. பாராளுமன்றத் தேர்தல் அன்று பொட்டலூரணி பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்த கூலிப்படையை அனுப்பியவர்களின் பின்புலம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
4. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பணி இடத்தில் பணிபுரியும் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செயலரை உடனடியாகப் பணியிட மாறுதல் செய்யவேண்டும்.
5. எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தில் இருந்து பொட்டலூரணியைப் பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்கவேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!