தமிழகம்

நெல்லையில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கம்; கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்

74views
நெல்லையில் பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் 100 எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த அனைவரையும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா வரவேற்றார். தொடர்ந்து கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் கலைஞர் தமிழ் -100 என்கின்ற தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. கவியரங்கிற்கு முனைவர் இராஜ. மதிவாணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவன் தொடக்க உரை ஆற்றி கவியரங்கினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்திருந்த 27 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர்.
பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கவிஞர் பேரா தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பா.இராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் கருத்தரங்க ஆய்வுக் கோவையினை வெளியிட்டார். தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க இணையதளத்தை இயக்குநர் தொடங்கி வைத்துப் பேசினார். தனது உரையில், “கலைஞர் இலக்கியப் படைப்புகள் எல்லாம் நூறாண்டுகள் கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரது படைப்புகள் சமூக நோக்கங்கள் சமூக வளர்ச்சி இவைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. திருக்குறளை அதிகமாக முன்னெடுப்புச் செய்தவர் கலைஞர். அவரது படைப்புகள் உலகம் முழுவதும் பேசப்படுகின்ற படைப்புகளாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இன்று பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் இணைய தளத்தினையும் நான் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இணையதளத்தின் பயன்களை இச்சங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சி மற்றும் இலக்கிய பணிகளை இணையதளத்தின் வாயிலாக உலகமெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கருத்தரங்கின் மூலமாக கலைஞருடைய படைப்புகளுக்காக அவரது நூற்றாண்டு காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருதினை வழங்கி ஒன்றிய அரசு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது உரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் ஆளுமைகள் முனைவர் ஔவை அருள், கவிஞர் நெல்லை ஜெயந்தா, மருத்துவர் பிரேமச்சந்திரன். மருத்துவர் ஆதம் சேக் அலி, மருத்துவர் ச. இராஜேஸ்வரி, எழுத்தாளர் செ. திவான், முதுமுனைவர் பா.வளன் அரசு, எஸ் .மில்லத் இஸ்மாயில், கவிஞர் பாமணி ஆகியோருக்கு கலைஞர் தமிழ் என்கின்ற உயர் விருது வழங்கப்பட்டது. விருதினை இயக்குநர் முனைவர் ஔவை அருள் வழங்கினார். தொடர்ந்து கருத்தரங்க கட்டுரை வாசித்தல் அமர்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து பல தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் கோவில்பட்டி பா.முத்து முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா மற்றும் நிர்வாகிகள் பா. இராமகிருஷ்ணன், கோவில்பட்டி பா.முத்துமுருகன், கடையம் அ.சங்கிலி பூதத்தான் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!